'பேட்ட' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் 'தர்பார்'. பொங்கல் வெளியீடாக திரைக்கு வருவதற்கு ரெடியாகும் இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். 

நீண்ட காலத்திற்குப் பிறகு, 'தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தை தொடர்ந்து, ரஜினியுடன் அனிருத் இணையும் 2-வது படம் இது.


லைகா நிறுவனத்தின் மிகபிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகிவரும் 'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டாரின் மூன்று லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து, வரும் டிசம்பர் 7ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 

அதற்கேற்றார் போல், முதல் சிங்கிள் ட்ராக் லோடிங் போன்று வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன், தலைவர் ரசிகர்களே உற்சாகமூட்டும் அறிவிப்புக்கு ரெடியாக இருங்கள் என விளம்பரம் செய்து ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்தது தயாரிப்பு தரப்பு.
இந்த நிலையில், தலைவர் ரசிகர்கள் ஆவலுன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கண்ணுங்களா சும்மா கிழிக்க ரெடியா? தலைவரின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக், வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகும்" என அறிவித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத்தின் இசையில், பிரபல பாடகர் எஸ்.பி.பி. பாடியிருக்கும் "சும்மா கிழி" என்ற இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அறிவிப்புடன் ஒரு வீடியோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


https://twitter.com/LycaProductions/status/1198564566591913989

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே, டுவிட்டரில் தர்பார் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி தலைவர் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர். பாடல் வரிக்கு ஏற்ப முதல் சிங்கிள் ட்ராக்கும் சும்மா கிழித்து தொங்கவிடும் என நாமும் எதிர்பார்க்கலாம்.