’ரெண்டு வருஷம் நல்லா ரெஸ்ட் எடுத்து உருப்படியா, ஜெயிக்கிற மாதிரி, ஒரு கதை பண்ணுங்க ப்ரதர். 2021ல நானே ரிஸ்க்’ எடுக்கிறேன்’ என்று தனது அண்ணன் செல்வராகவனுக்கு தம்பி தனுஷ் வாக்குக்கொடுத்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாகவே இயக்குநர் செல்வராகவன் செம சொதப்பலான டைரக்டராக மாறி பெரிய பெரிய தயாரிப்பாளர்களைத் தேடித் தேடி காவு வாங்கி வருகிறார். கடைசியாக அவர் ஹிட் லிஸ்டில் மாட்டிக்கொண்டவர் நடிகர் சூர்யா. இருவரும் இணைந்த ‘என்.ஜி.கே’வும் படு தோல்வி அடைந்ததால் செல்வராகவனால் இனி எந்த ஹீரோவுக்கும் கதை சொல்ல முடியாத நிலை.

என்ன இருந்தாலும் சொந்த அண்ணனாச்சே அப்படியே சும்மா விட்டுவிட முடியுமா? ஆறுதல் சொல்வதற்காக செல்வாவை சந்தித்த தனுஷ்,’என் கைவசம் ஏற்கனவே கமிட் பண்ணுன 4 படம் இருக்கு. அதை முடிச்ச உடனே நாம சேர்ந்து பண்ணலாம். ஆனா அடுத்த வாட்டியாவது ஜெயிக்கிற மாதிரி ஒரு நல்ல கதையா பண்ணுங்க ப்ரதர்’ என்று ப்ராமிஸ் பண்னியிருக்கிறாராம். தனுஷ் கைவசம் தற்போது வெற்றிமாறனின் ‘அசுரன்’ சத்யஜோதி ஃபிலிம்ஸ் படம், பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜின் படம் உட்பட 4 படங்கள் இருக்கின்றன.