இயக்குனர் செல்வராகவன் இயக்கிய, 'புதுப்பேட்டை' படத்தில் இணைந்து நடித்த தனுஷ் மற்றும் சினேகா இருவரும் மீண்டும் 13 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்க உள்ளனர். 

இந்த படத்தை, துரைசெந்தில்குமார் இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்க உள்ள இந்த படத்தில் தனுஷ், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அப்பா தனுஷூக்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளதாகவும், மகன் தனுஷூக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான முந்தைய இயக்கிய படமான 'கொடி' படத்திலும் தனுஷ், அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

எனவே இந்த படம் 'கொடி ' படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. மற்றொரு புறம் இந்த படம் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல் பரவி வருகிறது.

எனவே ரசிகர்கள் தனுஷ் தற்போது சினேகாவுடன் நடிக்க உள்ளது,  புதிய கதையா? அல்லது இரண்டாம் பாகம் கதையா என விடை தெரியாத கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.