மும்பையில் நடைபெற்ற குபேரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், தனுஷ் மற்றும் ராஷ்மிகாவின் எதிரும் புதிருமான பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Refuse to Speak in Tamil : சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் ஆகியோர் நடித்துள்ள படம் 'குபேரா'. இப்படம் வருகிற ஜூன் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நாகார்ஜுனா பேசுகையில், நடிகை ராஷ்மிகாவை புகழ்ந்து தள்ளினார்.

ராஷ்மிகா நடித்த சமீபத்திய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைப் பாராட்டி பேசிய அவர், "இந்தப் பெண் ஒரு திறமைசாலி. கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது படங்களைப் பாருங்கள், அது மிகவும் சிறப்பானது. எங்களில் யாருக்கும் 2000-3000 கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் இல்லை. எங்களை எல்லாம் மிஞ்சிட்டாங்க," என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில், ராஷ்மிகா மந்தனா மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். ரன்பீர் கபூரின் 'அனிமல்', அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' மற்றும் விக்கி கௌஷலின் 'சாவா' ஆகியவை அந்தப் படங்கள்.

குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியால் வெடித்த சர்ச்சை

தற்போது ராஷ்மிகா திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார். மும்பையில் நடைபெற்ற 'குபேரா' படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழாவில், திரையுலகின் சிறந்த நடிகையாகக் கருதப்படுவது குறித்து ராஷ்மிகா பேசினார். அவர் இந்தியில் பேச தொடங்கியதும், அங்கிருந்த ரசிகர்கள், தமிழில் பேசுமாறு கூச்சலிட்டனர். அதற்கு அவர், இந்த இந்தி மீடியாவிற்கு தமிழ் புரியாதே என சொல்லிவிட்டு, ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

அவர் கூறுகையில் "நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த நம்பர் ஒன் போட்டி எதைப் பற்றியது என்று எனக்குப் புரியவில்லை. தென்னிந்தியாவிலும் பாலிவுட்டிலும் படங்கள் பண்ணிட்டு இருக்கோம். இந்தப் போட்டி எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்," என்று ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகாவை தொடர்ந்து பேச வந்த தனுஷ், தமிழில் பேசியதைக் கேட்டதும் அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது. பின்னர் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தனுஷை இந்தியில் பேச சொன்னதும். அவர் இந்தி தனக்கு பேச வராது என சொல்லியதோடு, ஆங்கிலமும் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன் என கூறினார்.