இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம், விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. 

அத்துடன், இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தமிழ் திரையுலகில் நல்ல ஓபனிங்கை கொடுத்தது.'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 

இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். அசுரன் படத்தின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு, மீண்டும் தனுஷ் படத்தை தாணு தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி சேர்ந்துள்ள இந்த படத்துக்கு, 'கர்ணன்' என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நீண்ட நாட்களாக இந்த படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடமிருந்து படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் படத்துக்கான பாடல் தயாரிப்பு பணிகளை அவர் தொடங்கிவிட்டாராம். 

தென் தமிழகத்தின் நாட்டுப்புற பாடகர்கள் இந்த படத்தில் பணிபுரியவிருப்பதாகவும், இதற்காக தயாரிப்பாளர்  தாணு மற்றும் தன்னுடைய குழுவினருக்கு நன்றி என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் D-40 படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.