தனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் கேரவனின் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731-ஐ அபராதமாக மின்வாரியம் விதித்துள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள விஐபி - 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல இடங்களுக்குச் சென்றுவந்த தனுஷ் தற்போது ஓய்விற்காக தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அங்கம்மாள் என்ற கோவில் உள்ளது. குலதெய்வ கோவில் என்பதால் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, இயக்குனரும் தந்தையுமான கஸ்தூரி ராஜா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோருடன் முத்துரெங்காபுரம் கிராமத்திற்குச் சென்றனர்.

அவர்களின் வருகையை முன்னிட்டு அந்த கிராமத்தில் முன்கூட்டியே அவர்களுக்காக கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கேரவனுக்காக நேற்று காலை 8 மணி முதல் பிறபகல் 3 மணிவரை அனுமதியின்றி மின்சாரம் எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, அந்த கிராமத்திற்குச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் கேரவனின் ஓட்டுநர் மற்றும் தனுஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுக்கப்பட்டது உறுதியானது. இதன் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் கேரவன் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731 அபராதம் விதித்தனர்.