ரசிகர் மன்ற பதவிகள் இங்கு விற்கப்படும் என்ற தலைப்பிட்டு தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பெயரில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவன் தனுஷ் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியோடு சென்னை மாவட்டம், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் ஒட்டிய போஸ்டர்களில், தனுஷ் மன்றத்தில் உழைக்கிறவர்களுக்கு பதவிகள் கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும். அதையும் வருடத்துக்கு ஒரு முறை பணம் கொடுத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ரஜினி கட்சியைத் தவிர மாற்றுக் கட்சியில் உள்ளவர்களுக்கு தனுஷ் மன்றத்தில் இடம் இல்லை, பதவி பெற்றவர்கள் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 100 நாட்கள் முன்னதாகவே தொடங்கி, தினமும் விளம்பரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதவி விவகாரத்திற்க்கு  காரணம், தனுஷ் மன்றத்தின் அகில இந்திய தலைவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவாவும், அகில இந்திய செயலாளர் டச்சப் ராஜாவும்தான் என்று அந்த போஸ்டரில்  போட்டோ போட்டு கூறியிருக்கின்றனர்.

இந்த மாதிரி போஸ்டர் பரபரப்பெல்லாம்,  மன்றத் தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் சிலர் செய்யும் வேலை. இந்த போஸ்டர்கள் பற்றி தனுஷ் சாரின் கவனத்துக்குக் கொண்டு போய்விட்டோம் என முக்கிய நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர்.