கவுதம் வாசுதேவ் மேனனின் 3 வருட போராட்டத்திற்கு பிறகு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது "எனை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படம். முதலில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேகா ஆகாஷ் நாயகியாக நடித்தார். இயக்குநர் சசிக்குமார், புதுமுகம் ராமகுரு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ஷீட்டிங் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரொமாண்டிக் திரில்லர் படமான "எனை நோக்கி பாயும் தோட்டா" 55 நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டது. 

படத்தின் இயக்கம் மட்டுமல்ல தயாரிப்பும் கெளதம் வாசுதேவ் மேனன் தான் என்பதால் நிதி நெருக்கடியில் சிக்கியது. இறுதிகட்ட படிப்பில் பங்கேற்பதற்காக தனுஷிடம் கால்சீட் கேட்ட போது, அவர் "மாரி 2" படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அடுத்தடுத்து தள்ளிப்போன "எனை நோக்கி பாயும் தோட்டா" படம் இந்த மாதம் 15ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் பிரச்சனை காரணமாக மீண்டும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார் கெளதம் வாசுதேவ் மேனன். அப்போது தான் ஐசரி கணேஷினின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு கைகொடுக்க முன்வந்தது. 

படத்தின் தமிழக உரிமை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கு விற்கப்பட்டதை அடுத்து இன்று "எனை நோக்கி பாயும் தோட்டம்"  வெற்றிகரமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இடைப்பட்ட 3 'மாரி 2', 'விஐபி 2', 'அசுரன்', 'பக்ரி' என அடுத்தடுத்த ஹிட் படங்களை தனுஷ் கொடுத்திருந்தாலும், "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள மாஸ் ரெஸ்பான்ஸ் கெளதம் வாசுதேவ் மேனனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காலை முதலே தியேட்டர்களில் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாசு வெடித்து "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்தை வரவேற்று வருகின்றனர். தியேட்டர்களில் தனுஷ் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் ஆராவாரம் விண்ணைப் பிளக்கிறது. 

தனுஷ் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் செல்போனில் படம் பிடிக்கும் ரசிகர்கள் புதுப்புது ஹேஷ்டேக்குகளுடன் டுவிட்டரில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 3 வருடங்கள் ஆனாலும் துளியும் மாஸ் குறையாமல் வழக்கமான தனுஷ் படங்களைப் போல எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திருவிழா தியேட்டர்களை அதிரவைத்துள்ளது. இந்த முறை தனுஷ் ரசிகர்களோடு சூர்யா, விஜய், ரஜினி ஃபேன்ஸ் கிளப்புகளும் கைகோர்த்துள்ளனர். அவர்களும் தனுஷின் எனை நோக்கி பாயும்  தோட்டா படம் வெற்றி பெற வேண்டுமென சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் மூலம்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.