நடிகர் தனுஷ் என் மகன்தான். இதற்காக மரபணு சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன். கஸ்தூரி ராஜா தன்னுடைய மகன் எனக் கூறுவதால் குழப்பத்துக்கு நீதிமன்றம்தான் சரியான தீர்வு அளிக்க முடியும்’ என மேலூரைச் சேர்ந்த தம்பதி தெரிவித்தனர்.
நடிகர் தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர்.
இந்த தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் கலைச் செல்வன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 7.11.1985-ல் பிறந்தார். திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தபோது, திடீரென காணாமல் போனார்.

இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். தனுஷ் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மேலூர் நீதிமன்றம் தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் கஸ்தூரிராஜா, ‘எங்கள் குடும்பம், தனுஷ் குறித்து 40 ஆண்டுகளாக அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற வழக்கு களால் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணாகிறதே என்று வருந்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து நேற்று கதிரேசன் தம்பதி கூறியதாவது: எனது வழக்கறிஞர் மூலம் கஸ்தூரிராஜா பதில் அளித்துள்ள தகவல் கிடைத்தது. நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருப்பது நீதிமன்றத் தையே அவமதிப்பதாகும். தனுஷ் என் மகன் என்கிறேன். கஸ்தூரி ராஜா அவரது மகன் என்கிறார். பிரச்சினை என வந்துவிட்டதால் தான் நீதிமன்றம் சென்றுள்ளேன். நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்க நான் தயாராக உள்ளேன். தனுஷ் என் மகன் என நிரூபிக்க மரபணு உள்ளிட்ட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளதாகவும் அவா் தொிவித்தாா்.
