Dhanush Movie: 'ராயன்' மட்டும் இல்ல.. தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கார்த்திருக்கும் டபுள் ட்ரீட்!
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'ராயன்' திரைப்படம் வெளியாக உள்ளது மட்டும் இன்றி, தனுஷின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்து - இயக்கியுள்ள 50-வது திரைப்படமான 'ராயன்' படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'புதுப்பேட்டை' ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என பெயர் எடுத்தவர் தனுஷ். ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்வு செய்து நடிக்க விரும்பாத தனுஷ், தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி வருகிறார். மேலும் தென்னிந்திய திரை உலகத்தை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் போன்றவற்றிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ், தன்னுடைய 50-ஆவது படத்தை தானே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
'ராயன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சரவணன், பிரகாஷ்ராஜ், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கான புரமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், 'ராயன்' திரைப்படம் வெளியாகும் அதே நாளில், தனுஷ் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த, புதுப்பேட்டை திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
'புதுப்பேட்டை 2' படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என ஆவலோடு இருக்கும் ரசிகர்களுக்கு, தனுஷின் புதுப்பேட்டை ரீ ரிலீஸ் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டாராக நடித்து மிரட்டு இருப்பார். மேலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், இப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் என இருவர் நடித்திருப்பார்கள். அதேபோல் விஜய் சேதுபதியும் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட்டாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.