தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் மிக மிக விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக இருக்கிறது.

தமிழில் பிசியான இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷும், விஜய் ஆண்டனியும் முழு நேர நடிகர்களாக மாறி முன்னணி இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். சகட்டுமேனிக்கு படங்களைக் கமிட் பண்ணி வரும் ஜி.வி.பிரகாஷ் வருடத்திற்க்கு குறைந்தது ஒரு டஜன் படங்களிலாவது நடித்துவிடுகிறார்.விஜய் ஆண்டனி சில மாதங்கல் முன்பு வரை நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று மூன்று அவதாரங்கள் எடுத்து வந்தார். தயாரித்த படங்கள் சில தோல்வி அடைந்தவுடன் தற்போது முழு நேர நடிகராக 5 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் வழியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக களம் இறங்குகிறார். ‘ரங்காஸ்தலம்’ உட்பட தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த சுகுமார் இப்படத்தை இயக்க,தெலுங்கின் இன்னொரு  பிரபலமான தில்ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார். 96ல் ‘தேவி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தேவி ஸ்ரீ பிரசாத்தாக மாறிய இவர் ஏற்கனவே தமிழில் ‘வெடி’ என்ற படத்திலும் ஒன்றிரண்டு தெலுங்குப் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியிருக்கிறார்.

தெலுங்கில் சுமார் 100 படங்களுக்கு மேலும் தமிழில் ’சச்சின்’,’தசாவதாரம்’,’மன்மதன் அன்பு’,’மழை’,’கந்தசாமி’,’சாமி 2’ உட்பட 20க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்திருக்கும் தேவ் ஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவின் தீவிரமான பக்தர். தனது ரெகார்டிங் ஸ்டுடியோ முழுக்க ராஜாவின் படங்களை மாட்டியிருப்பவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.