அத்துடன், 1992-ம் ஆண்டு வெளியான தனது சூப்பர் ஹிட் படமான  'தேவர் மகன்'  படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'தேவர் மகன்-2' என டைட்டில் வைத்தால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால், 'தலைவன் இருக்கின்றான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், இந்தப் படத்தில், 'தேவர் மகன்' முதல் பாகத்தில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி  வருகிறது. 

'தேவர் மகன்' படத்தில் இசக்கி கேரக்டரில் நடித்த வடிவேலு, இந்த  படத்திலும் ஒரு கை இல்லாதவராக நடிக்க உள்ளாதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
தற்போது, 'தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த ரேவதி, இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தேவர் மகனில் இளையராஜா இசையில் இடம்பெற்றிருந்த 'இஞ்சி இடுப்பழகி' பாடல் மிகவும் பிரபலம். இதில், கமல் - ரேவதி ஆகியோரின் நடிப்பு இன்றளவும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. 

இதனால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் ரேவதி நடிப்பது உறுதியாகும் பட்சத்தில்,  27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கும் படம் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். 
மேலும் 'தேவர் மகன்' படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த கவுதமி, இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்குரிய பதிலை படக்குழுவினர் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.