இது தொடர்பாக கமல்ஹாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் , கமலஹாசன் என்ற நடிகரை மிக மிக மதிக்கக் கூடியவன் நான்,  ஆனால், அவரின்  திரைப்படப் பெயர்கள் தமிழ்சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் அதை கடுமையாக நான் எதிர்த்திருக்கிறேன் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தாங்கள்  தேவர் மகன் -2 எடுப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், 1993ல் வெளியான அதன் முதல் பாகத்தால் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

 தேவர் மகன் படத்தின் முதல் பாகத்தால்  விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப் போர் நடந்துகொண்டே இருக்கிறது எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

உங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாங்கள் நஷ்ட ஈடு வேண்டும் என  வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது எனவும்  கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

ஏதோ ஒரு சூழலில் ஏற்பட்ட தவறை சரிசெய்யக் கூடிய வகையில், தேவேந்திரகுல வேளாளர்களுடைய பெருமையை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு படைப்பை நீங்கள் தந்திருக்க வேண்டும்.

ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என்றும், சமீபத்தில் கூட ஒரு எம்எல்ஏ சாதிய மனப்பான்மையோடு பேசி கைது செய்யப்பட்ட நிகழ்வு தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு"தேவேந்திரர் மகன்" என பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய நடுநிலையாளராக அனைவராலும் கருதப்படுவீர்கள் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

வலுத்தவர்களுக்கே மீண்டும் இனிப்பை வழங்குவது எந்த விதத்திலும் உகந்தது அல்ல என்றும், யார் இனிப்புக்காக ஏங்குகிறார்களோ அவர்களுக்கு அதை வழங்குவது தான் உகந்தது.. உத்தமமானது எனவும் அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை தேவர் மகன் -2 என பெயரிடும் பட்சத்தில் முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிக மிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய சூழல்கள் உருவாகும் என்றும், அந்த படம் ஓடாமல் நிச்சயம் முடங்கும் என கிருஷ்ணசாமி  தனது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.