depawali relese movies
திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 10 சதவீத கேளிக்கை வரியும் சேர்த்து விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைப்பது என அதிரடி முடிவு எடுத்தனர்.
தியேட்டர்களை மூடப்போவதாகவும் ஒரு சில திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் இந்த தீபாவளிக்கு திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . இந்தப் பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள், தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளி படங்களை திரையிடுவதில் ஏற்பட்ட தடை நீங்கியது.
இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி வரும் 18 ஆம் தேதி அதாவது தீபாவளி தினத்தன்று, மெர்சல் திரைப்படம் வெளியாவது உறுதிசெய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த தீபாவளிக்கு மெர்சல் படத்திற்கு போட்டியாக மேலும் மூன்று படங்கள் வெளியாகப் போவதாகக் கூறப்படுகிறது. அவை நடிகர் சரத் குமார் நடித்து தயாராகியுள்ள 'சென்னையில் ஒரு நாள் 2 ' . செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது கதாநாயகியாக உருவெடுத்திருக்கும் 'பிரியா பவானி' மற்றும் வைபவ் நடித்துள்ள 'மேயாத மான்', மற்றும் சசிகுமார் நடித்துள்ள 'கொடி வீரன்' ஆகிய படங்கள் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சலை எதிர்த்து துணிந்து வரும் இந்தப் படங்கள் மெர்சல் சுனாமியில் இருந்து வெளியே தெரியுமா என பொறுத்திருந்து பாப்போம்.
