பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தற்போது ஆசிட் வீச்சுக்கு ஆளான பிறகும் வாழ்க்கையை துணிச்சலோடு எதிர் கொள்ளும் உண்மையானபெண் லட்சுமி அகர்வாலின் கதாபாத்திரத்தில், உருவாகியுள்ள சப்பாக் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தீபிகா படுகோன், பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார். 

தீபிகாவின் இந்த துணிச்சலை திரைத்துறையினர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.  இருப்பினும் தனது சப்பாக் படத்தை விளம்பரப்படுத்த தீபிகா படுகோன் இவ்வாறு செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.  இதனை தொடர்ந்து அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தீயாய் பரவியது.

இதனிடையே சப்பாக் படத்துக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கட்டை கேன்சல் செய்து விட்டதாக பலரும் ஒரே டிக்கெட்டை திரும்பத் திரும்ப ஷேர் செய்தது சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.  

 இதனிடையே மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்ட விளம்பரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார்.அந்த விளம்பரத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக தகவல் பரவி வருகிறது. விளம்பரம் சரியாக வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சப்பாக் படத்திற்கான எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது தீபிகா நடித்த விளம்பர படத்திற்கும் சிக்கல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.