Decision to approve Padmavathi Film The Censor Board has decided to remove the name and 26 scenes

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி திரைப்படத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து, அதற்கு ஒப்புதல் வழங்க மத்திய தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளது. படத்தில் 26 காட்சிகளையும், படத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று தணிக்கை வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

தீபிகா படுகோனே

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் ராணியை மையமாக கொண்டு கற்பனைக் கதைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், அவரது கணவரான ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், வில்லனாக அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

தொடரும் சர்ச்சை

இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அதனை சூறையாடிய இந்துத்துவ கும்பல், படத்தின் இயக்குனர் பன்சாலி மீதும் தாக்குதல் நடத்தின. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் தற்போது வரைக்கும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

தாமதமாகும் வெளியீடு

பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

மாநில அரசுகள்

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதற்கிடையே நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜரான பன்சாலி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையால் தனக்கு ரூ. 150 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

முப்பரிமாணம்

முன்னதாக, பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் சில விபரங்களை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த விண்ணப்பத்தை தணிக்கை வாரியம் திருப்பி அனுப்பி விட்டது.

பத்மாவதி படம் வழக்கமான 2D எனப்படும் இரு பரிமாண வடிவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், வியாபார உத்தியாக இப்படத்தின் ஒரு டிரெய்லர் 3D- எனப்படும் முப்பரிணமான வடிவில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பையடுத்து பத்மாவதி படம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 2D-யில் இருந்து 3D-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிறப்பு குழு அமைப்பு

இந்த புதிய 3D வடிவ பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் உள்ள மத்திய தணிக்கை வாரியத்திடன் புதிய விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிய இயக்குனர் பன்சாலி, சிறப்புக்குழுவில் வரலாற்று ஆசிரியர்கள், ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தை தணிக்கை செய்ய வரலாற்று ஆய்வாளர்கள், ஆன்மிக தலைவர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 28-ம் தேதி படத்தை பார்த்தனர்.

U/A சான்றிதழ்

பின்னர், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்கும்படியும், படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையின்போதும் ‘பொறுப்பு துறப்பு’ (கற்பனைக் கதை என்ற) அறிவிப்பு இடம்பெற வேண்டும். படத்தின் தலைப்பை ‘பத்மாவதி’என்பதிலிருந்து ‘பத்மாவத்’ என்று மாற்ற வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதையடுத்து படத்திற்கு UA முத்திரையுடன் சான்றிதழ் அளிக்க தணிக்கை வாரியம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு இந்தி திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.