ரஜினி படங்களில் ஓப்பனிங் இரண்டு மூன்று  நாட்கள் அவரது ரசிகர்களின் ராஜ்ஜியம்தான் நடக்கும். அதன் பிறகுதான் பொது ஆடியன்ஸ் வருவார்கள். அப்படத்தை இயக்கிய முக்கிய இயக்குநரின் ரசிகர்கள், ஹீரோயினின் ரசிகர்கள், பாடலுக்காக வருபவர்கள், என்று ரஜினி தவிர்த்த அடுத்த தளங்களின் ரசிகர்கள் வருவார்கள். இதெல்லாம் பழைய காலம். ஆனால் இப்போது ஓப்பனிங் ஷோவிலேயே மற்ற ரசிகர்களும், ரஜினியின் வெறி ரசிகர்களோடு இணைந்து வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதும், இடைவேளையின் போதும் இவர்கள் சோஷியல் மீடியாக்களில்  படம் பற்றிய தங்கள் கருத்துக்களை சூடாக பதிவு செய்து விடுகின்றனர். 

அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு, ரஜினிக்காக இல்லாமல் மற்ற விஷயங்களுக்காக வந்த ரசிகர்கள் நெகடீவ் விமர்சனங்களை துவக்கத்தில் இருந்தே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி! என்று கதையம்சமான படங்களை கொடுத்துப் பழகிய ஏ.ஆர்.முருகதாஸுக்கென்று ஒரு பெரும் ரசிகப்பட்டாளம் இருக்கிறது. இவரது ரசிகர்கள் எல்லா வயதிலும், எல்லா சென்டர்களை  சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் மாஸ் சினிமாத்தனம் தாண்டி வேறு விஷயங்களை முருகதாஸிடம் எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்து விழுகிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களை தர்பார் திருப்திப்படுத்தவில்லை. ’இது முருகதாஸின் படமே இல்லை! எஸ்.பி.முத்துராமனும், கே.எஸ்.ரவிக்குமாரும் எடுக்குற படத்தை ஏன் முருகதாஸ் எடுக்கணு?’ என்று படம் துவங்கிய பதினைந்தாவது நிமிடத்திற்குள்ளேயே நெகடீவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர். 

இடைவேளையின் போதும், இரண்டாவது பாதி நகர்கையிலும் அதை பதிவு செய்து, தியேட்டருக்கு வெளியே காத்து நின்ற டாட்காம்களின் கேமெராக்களிடமும் கொட்டி தீர்த்துவிட்டனர்.சென்னையில் ஒரு கார்ப்பரேட் லுக் இளம்பெண் ‘ப்ச்ச்ச்...தர்பார் தேறாது’ என்று சொன்ன வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இன்னும் பலர் ’ஏ.ஆர்.முருகதாஸ் ஏமாத்திட்டார். படமா இது?’ என்றும், சிலரோ வாயில் ஒரு விரலை வைத்து மூடி, ‘சொல்வதற்கு ஒண்ணுமில்லை’ எனும் ரேஞ்சில் சைகை காட்டியும் நகர்ந்தனர். இப்படி சிலர் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில், நெருக்கித் தள்ளும் ரஜினியின் ரசிகர் கூட்டமோ....’படம் மாஸ்! செம்ம ஓப்பனிங்! தலைவர் தலைவர்தான்!’ என்று குதித்துக் கொண்டாடுகின்றனர். ஹும்...ரஜினியின் படம் அவரது ரசிகர்களுக்கு மட்டும்தானே சொந்தம்!