dalith Pandian wrote a letter to Vishal

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இயக்குநர் பாலாவுக்கு கண்டனம் தெரிவித்து நாச்சியார் படத்தில் வரும் ஆபாச வசனத்தை நீக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே பிரிவு) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாச்சியார் பட டீஸரில் நடிகை ஜோதிகா ***பயலுக என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். இதற்கு நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குநர் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே பிரிவு) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கடந்த மாதம் 27-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இதில், நவம்பர் 29-ஆம் தேதி முதற்கட்ட விசாரணையும், டிசம்பர் 7-ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணையும் நடைபெற்றது. இந்த வழக்கில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தலித் பாண்டியன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நாச்சியார் படத்தில் தகாத வசனத்தை இடம் பெறச் செய்த இயக்குநர் பாலாவுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, குறிப்பிட்ட ஆபாச வசனத்தை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.