பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்களை விட அதில் குற்றம் கண்டு பிடித்துப் பேர் வாங்கும் புலவர்கள் அதிக பிரபல்யமாக இருப்பார்கள் என்கிற நிலவரப்படி, யூடுபில் திரைப்படங்களை தனது அதிரடி விமர்சனங்களால் கிழித்துத் தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அச்செய்திகளுக்குக் கீழே அவரது மரியாதைக்குரிய எதிரிகள்...’வாடி மாப்ள, உன் படத்துக்காக வெயிட்டிங்’என்று கமெண்டுகள் அடித்து வருகிறார்கள்.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரான மாறன் யூடுபில் விமர்சகராக ஆனதற்கு முன்பு தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தவர், அதிலும் குறிப்பாக நடிகர் வ்ஜய்யின் படங்களில் அதிகம் பணியாற்றியவர் என்கிற சரித்திரம் பலருக்குத் தெரியாது. அடுத்து யூடுயூப் விமர்சகராக மாறிய அவர் ஈவுஇரக்கமின்றி படங்களை விமர்சித்ததால் அதிகம் தேடப்பட்டவரானார். குறிப்பாக அஜீத்,விஜய், ரஜினி, சூர்யா படங்கள் சொதப்பலாக இருக்கும் மாறனின் விமர்சனத்தில் அனல் பறக்கும். அந்த விமர்சனத்துக்குக் கீழே கெட்ட வார்த்தை கமெண்டுகள் கொட்டிக்கிடக்கும்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இயக்குநராகும் முயற்சியில் மிகத் தீவிரமாக இயங்கி வந்த மாறனின் பட அறிவிப்பு நேற்று பூஜையுடன் வெளியானது. வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படத்தை மாறன் இயக்குகிறார். இது குறித்து மாறனிடம் பேசியபோது, ‘படத்தில் நரேன், ராதாரவி, ‘வழக்கு எண்’முத்துராமன் தவிர்த்து மீதி அனைவரும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். ‘வாடி மாப்ள உனக்காகத்தான் வெயிட்டிங்’போன்ற கமெண்டுகளை ரசித்துத்தான் பார்க்கிறேன். படங்களை விமர்சித்தோமே அதனால் ஒரு பயங்கரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்கிற சுமையையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் ஒரு நல்ல படம் என்று பாராட்டு வாங்கக்கூடிய ஒரு படத்தை இயக்குவேன்’என்கிறார். நாங்களும் வெயிட்டிங் பாஸ்.