கன்னியாகுமரி முதல் டெல்லி வரையில் பாராட்டுப் பெற்றுவரும், நெல்லையைச் சேர்ந்த, துணிச்சலான முதிய தம்பதியினரை சிங்’கத் தமிழன் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கம்போல் அட்மின் உதவியுடன் தமிழில் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் அத்தனை முக்கிய நிகழ்வுகளுக்கும் இவர் தொடர்ந்து ரியாக்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து நிலைகுலைய செய்தனர்.அவரிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். இதனை பார்த்த அவரது மனைவி செந்தாமரை வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையனின் மீது எடுத்து வீசினார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த பொருட்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினர்.

 சண்முகவேல் மற்றும் அவரது மனைவி கொள்ளையர்களை விரட்டியடிக்கும் காட்சி அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியினரின் வீரத்தை பாராட்டினர்.இன்று இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இவர்களைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனக்குரிய சிறப்பான வகையில் தமிழில் அசத்தலாக பாராட்டியுள்ளார்.ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை...Hats-off to the elderly couples of Thirunelveli who fought with  Robbers’’ என பதிவிட்டுள்ளார்.