திரைப்படங்களில் எந்த அளவிற்கு அந்த படத்தின் ஹீரோவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்களோ, அதே அளவுக்கு ரசிக்கப்படுபவர்கள் காமெடி நடிகர்கள். அந்த வகையில், 'பஞ்சதந்திரம்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான காமெடி பேச்சாலும், நடிப்பாலும் பிரபலமானவர் கிரேஸி மோகன்.

நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானவர். இவரின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல காமெடி, மற்றும் குணச்சித்திர நடிகருமான தியாகு "கிரேஸி மோகனின் புகழ், திரையுலகில் என்றும் மறையாது என கூறியுள்ளார்".

இவரை தொடந்து பழம்பெரும் நடிகர் ராதாரவி கூறுகையில், "கிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்".

இவரை தொடர்ந்து, காமெடி நடிகர் சார்லி, "மக்களுக்கு நல்ல தகவல்கள் சென்றடையும் வகையில் நகைச்சுவைகளை எழுதியவர் கிரேஸி மோகன் என்றும் அவருடைய நினைவு என்றும் மறையாது என கலக்கத்தோடு கூறியுள்ளார்". 

நடிகர் ஸ்ரீமன் ‘ரோலர் கோஸ்டர்’ போல் நகைச்சுவை வசனங்களை வழங்குவது கிரேஸி மோகனால் மட்டுமே முடியும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இவருடைய உடல் தற்போது அஞ்சலிக்காக மந்தைவெளியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.