கடந்த 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர். திரையுலகையே உலுக்கிய இந்த கோர விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், தயாரிப்பு நிறுவனமான லைகா, கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல், கவனக்குறைவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நசரத்பேட்டை  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த கோர விபத்து தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டு, அவரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழக்கியுள்ளது. இதற்கு முன்னதாக போலீஸ் விசாரணையின் போது விபத்து குறித்து கிரேன் ஆபரேட்டர் கொடுத்த பகீர் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதில் கிரேன் இவ்வளவு பாரம் தாங்காது என்று தான் பலமுறை கூறியதாகவும், ஆனால் அதை கேட்காத கேமரா டிப்பார்ட்மெண்ட் ஆட்கள் பார்த்துக்கலாம் ஏத்துங்க என கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்களது வற்புறுத்தலின் பேரில் ஓவர் பாரம் ஏற்றியதால் தான் விபத்து நடந்ததாகவும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கேள்விப்பட்ட திரைத்துறையினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.