தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு  மகள்கள் உள்ளனர்.

அக்டோபர் 18ம் தேதி ராஜசேகர் ரெட்டி வெளியிட்ட பதிவில் அவருக்கும், மனைவி ஜீவிதா மற்றும் மகள்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது மகள்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், நானும், மனைவியும் விரைவில் குணமடைவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜசேகரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் அதை மறுத்த ராஜேசேகரின் மகள், அப்பா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று ராஜசேகர் உடல் நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

ஐதராபாத்தில் உள்ள சிட்டி நியூரோ சென்டரில் வெண்டிலேட்டர் சப்போர்ட் உடன் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு அவருக்கு பிளாஸ்மா தெரபி மற்றும் CYTOSORB தெரபி அளிக்கபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராஜசேகரின் உடல் நிலை நல்லபடியாக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.