ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக  வழக்கில் சிக்கிய  இயக்குநர் பா.ரஞ்சித் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் அங்கிருந்தபடியே மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையாக மாறியது.  பா.ரஞ்சித்தின் அந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து, அதில், 'வரலாற்றுத் தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது கருத்தை  சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் , சமூகத்தில் பேசப் பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும்  மன்னர் ஒருவரை இவ்வாறு பேசுவது ஏன்? இது போன்ற பேச்சுக்களைத் தவித்திட வேண்டும்' என்று கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகக் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரான இயக்குநர் ரஞ்சித் நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக பா. ரஞ்சித்  முன்ஜாமீன் கோரிய போது,   அவருக்கு  முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வெளிவந்த ‘காலா’படத்துக்குப் பின்னர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்கும் வேலைகள் எதிலும் ஆர்வம் காட்டாமல் சமூக அக்கறை தொடர்பான காரியங்களில் அதிகம் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.