அஜித் நடிப்பில் வெளியான வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களில் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்ப நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

90களின் இறுதியிலும் 2000 ஆண்டுகளின் தொடக்கத்திலும் அஜித் நடித்த பல படங்களை அவரது முன்னாள் நண்பர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து வந்தார். அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் சக்ரவர்த்தி தயாரித்த பல படங்கள் உள்ளிட்ட 17 அஜித் படங்களின் பாடல்களை சோனி நிறுவனம் அனுமதியின்றி எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிப்பரப்புவதாகக் கூறி  நிபே- ஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை சோனி மியுசிக் நிறுவனத்திற்குத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரி இருந்தது.

இந்த மனுவில் ‘அஜித் நடித்த 17 படங்களின் ஆடியோ உரிமையை நாங்கள் வாங்கி வைத்துள்ளோம். ஆனால், அதை சோனி நிறுவனம் யூட்யூப் போன்ற இணையதளங்களில் காப்புரிமை சட்டத்தை மீறி பதிவிட்டு வருகிறது. அந்தப் பாடல்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கவேண்டும்’ எனக் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த 17 படங்களின் பாடல்களை ஒளிப்பரப்ப சோனி நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது. இதனால், அந்த பாடல்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது.