கொரோனோவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தன்னுடைய கொடூர முகத்தை காட்டி உள்ளது.

தற்போது கொரோனா வைரஸை சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக கூறப்பட்டாலும், மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளுக்கு பரவி வருவதால் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

குறிப்பாக இந்தியாவில் கோரோனோவை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தாக்காமல் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

கொரோனோவின் தாக்கத்தால் தற்போது பல படங்களின் படப்பிடிப்பு பணிகளும் முடங்கியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா பாதிப்பால் முடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' படத்தின் அப்டேட் கொரோனா பாதிப்பால், தாமதமாகியுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர், எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  குறிப்பிட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாததாலும், படத்தின் பணிகள் தாமதமாவதாலும் தயாரிப்பாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.