பிரபலங்கள் பலரும் பாடி ஸ்பிரே விளம்பரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததை அடுத்து யூடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனத்தின் பாடி ஸ்பிரே விளம்பரம் ஒன்று பெண்ணை இழிவாகவும், பாலியல் வன்முறையை தூண்டும் விதமாகவும் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதனை நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் ஒரு விளம்பரம் சூப்பர் மார்கெட்டில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பெண் ஒருவர் ட்ராலியுடன் செல்ல, அவரின் பின்னால் நிற்கும் நான்கு இளைஞர்களில் ஒருவர் "நாம 4 பேரு. ஆனா ஒண்ணு தான் இருக்கு... அது யாருக்கு ....." என்று இரட்டை அர்த்தத்துடன் கேட்க. அந்தப் பெண் திகைத்து போய் திரும்புகிறார். அப்போது அந்த நான்கு இளைஞர்களும் ஒரு பாடி ஸ்பிரேயைப் பற்றி பேசியதாக காட்டுகின்றனர். இதனால் அந்த பெண்ணும் நிம்மதி அடைகிறார்.
மற்றொரு விளம்பரம் வீட்டின் படுக்கை அறையில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் படுக்கையில் ஒரு பெண்ணும், பையனும் அருகருகே அமர்ந்திருக்க திடீரென கதவைத் திறந்து உள்ளே நுழையும் நான்கு இளைஞர்கள், அது எங்களுக்கும் வேணும் என்று கேட்க, அந்தப் பெண் திகைத்துப்போகிறார். பின்னர் அருகில் வரும் அந்த நபர் டேபிளில் உள்ள பாடி ஸ்பிரேயை எடுத்துக் கொள்கிறார். பின்னர்தான் அவர்கள் தன்னைப் பற்றி பேசவில்லை என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்கிறார்.

சமூக வலைதளங்களில் வெளியான இந்த விளம்பரத்துக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து இந்த விளம்பரத்தை நீக்கக் கோரி தொடர்ந்து எதிர்ப்பு குரல்களும் எழுந்து வந்தன. பிரபலங்கள் பலரும் இந்த விளம்பரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததை அடுத்து யூடியூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து அந்த விளம்பரங்களை நீக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... அஜித்தை தொடர்ந்து விக்ரம் பட நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்... இது வேறலெவல் மாஸ் கூட்டணியா இருக்கே
