கடந்த வாரம், பிரபல சண்டியர் வரிச்சியூர் செல்வத்தை சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளித்த பட்டாச்சாரியார்களுக்கு இந்து அறநிலையத்துறை மெமோ அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நாராயணன் திருப்பதி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு இது...

#அத்திவரதர் தரிசனத்தில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை முக்கிய நபர் என்ற அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டது குறித்து என் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். யார் வேண்டுமானாலும் இறைவனை தரிசிக்கலாம். தடையில்லை. மறுப்பில்லை. வரிச்சூர் செல்வம் அத்திவாரதரை தரிசித்தது குறித்து நம் விமர்சனம் இல்லை. ஆனால் எப்படி என்பதே சர்ச்சை. கட்டண அடிப்படையில் சென்றாரா அல்லது சிறப்பு அந்தஸ்து அனுமதியளிக்கப்பட்டதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், கோவிலில் அன்று இருந்த பட்டாச்சாரியார்கள் சிலருக்கு ஹிந்து அறநிலைய துறை நிர்வாகம் குறிப்பாணை (Memo) அனுப்பியுள்ளதாக அறிந்தேன். நெறிமுறைகளை, வழிமுறைகளை மீறி நடந்துள்ளதாகவும், இப்படி பட்ட ஒருவருக்கு எப்படி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது? விளக்கம் கொடுக்கவில்லையெனில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கோவிலின் நிர்வாக அதிகாரி பட்டாச்சாரியார்களுக்கு எழுதியுள்ளதாக தெரிகிறது. இது உண்மையென்றால், உறுதியாக வன்மையாக கண்டிக்கிறேன்.

வரிச்சூர் செல்வம் ஒரு பிரபல ரவுடி என்று பட்டாச்சாரியார்களுக்கு எப்படி தெரியும்? மிக முக்கிய நபர் (VVIP) என்ற அந்தஸ்தில் தரிசனத்திற்கு அனுமதியளிக்க அதிகாரம் கொடுத்தது யார்? பட்டாச்சாரியார்களா?மாவட்ட ஆட்சியரா? கோவில் கோபுரம் அருகே வரை செல்வத்தின் வாகனம் செல்ல அனுமதியளித்தது பட்டாச்சாரியார்களா? காவல் துறை உயரதிகாரிகளா? கோவிலுக்குள் அத்திவரதர் இருக்கும் இடம் வரை ரவுடி வரிச்சியூர் செல்வதை அழைத்து சென்று உட்கார வைத்தது பட்டாச்சாரியார்களா? அந்த கோவிலின் நிர்வாக அதிகாரியா? இவை அனைத்துமே சுற்று மூட்டத் தொலைக்காட்சி (Closed Circuit Television) யில் உறுதியாக பதிவு செய்யப்பட்டிருக்கும். சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் வரிச்சூயூர் செல்வம் குறித்த பதிவுகளிலும் இவை தெளிவாக உள்ள நிலையில். 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல்,அதிகாரிகள் செய்த தவறுக்கு அப்பாவிகள் சிலரை தண்டிப்பது எந்த விதத்தில் முறையாகும்?

பட்டாச்சார்யார்கள் மீது நடவடிக்கை பாயும் என்றால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் முறையான விசாரணை செய்து, மிக முக்கிய நபர் அந்தஸ்தை அனுமதித்த அதிகாரிகள் , கோபுரம் அருகே வரை வாகனத்தை அனுமதித்த அதிகாரிகள், நுழைவாயிலில் இருந்து சந்நிதி வரை செல்ல உதவி புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். (குறிப்பு : அதிகார வர்க்கத்தின் அனைத்து விதிமீறல்களையும் வெளிகொண்டுவந்ததற்கு காரணமான பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்திற்கு நன்றி)