இயக்குநர் பாரதிராஜாவில் தொடங்கி கடைசியாக இயக்குநர் லிங்குசாமி வரை இதுவரை சுமார் 6 பேர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படம் எடுப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், அதில் ஒருவர் கூட அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கவில்லை என்று தெரிகிறது.

‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினி என்னும் புதுமுக இயக்குநர் ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்போவதாகவும், அதில் ஜெ’வின் வேடத்தில் நடிகை நித்யாமேனனும், சசிகலா வேடத்தில் வரலட்சுமியும் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். அடுத்த சில நாட்களிலேயே இயக்குநர் ஏ.எல்.விஜயும், அவரைத் தொடர்ந்து பாரதிராஜாவும் தாங்களும் ஜெ’ வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக களத்தில் குதித்தனர். அவர்களோடு சேர்ந்து மேலும் ஒன்றிரண்டு அம்மா உப்புமா பட அறிவிப்புகளும் வந்தன.

இவற்றின் தொடர்ச்சியாக, பேரதிர்ச்சியாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ‘அம்மாவின் உண்மையான கதையை எங்கள் இயக்குநர் லிங்குசாமியால்தான் எடுக்க முடியும். எனவே நாங்கள் எடுக்கப்போகும் படமே உண்மையான அம்மா படம் என்று அறிவித்தார்.

ஜெ’வின் இரண்டாவது நினைவு நாளை ஒட்டி, மேற்படி படங்கள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன, யார் யார் எத்தனையாவது ஷெட்யூலில் இருக்கிறார்கள்  என்று விசாரித்தபோது, ‘சர்கார்’ பட விவகாரத்தில் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் காட்டிய வேகத்தால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே சப்தநாடி ஒடுங்கிப்போயிருப்பதாகவும், குறிப்பாக இயக்குநர் லிங்குசாமி ‘இப்போதைக்கு அதைப் பத்தியே பேசவேணாம் ஆளை விடுங்க சாமி’ என்று கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்.