அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கிண்டலடித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் இயக்குனர் மனோபாலா  வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக அவர்மீது போயஸ் கார்டன் , தலைமை கழகம் , காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக அதிமுக பிரமுகர் கூறியுள்ளார்.

இயக்குனர் மனோ பாலா அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருக்கிறார். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை யார் வழிநடத்தி செல்வது என்ற பிரச்சனை வந்த போது சசிகலாதான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

ஆனந்தராஜ் ,விந்தியா , நாஞ்சில் சம்பத் போன்றோர் எதிர்த்தனர் பேட்டி அளித்து விலகி நின்றனர். ஆனால் நாஞ்சில் சம்பத் பின்னர் மேலிடம் அழைத்ததன் பேரில் இணைந்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் , இயக்குனரும் , நடிகர் சங்க நிர்வாகியுமான மனோபாலா  தனது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா , முதல்வர் ஓபிஎஸ் பற்றிய சர்ச்சைக்குரிய கிண்டல் வாசகத்தை பதிவு செய்துள்ளார்.

இது பற்றி அதிமுக பிரமுகரும் நடிகருமான  ஆலந்தூர் சினி.சரவணன் இது குறித்து போயஸ் கார்டன் , அதிமுக தலைமை நிலையம், ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவரது அறிக்கையில் :

நாடு  ஒரு  நல்ல  தலைவரை இழந்து  ஆழ்ந்த  சோகத்தில் தத்தளிக்கிறது! தமிழக  மக்களும்  எங்கள் அஇஅதிமுக  விசுவாசிகளும்  செய்வதறியாமல்   தடுமாறுகிறார்கள்! தவிக்கிறார்கள்!

இந்த  சோதனையான தருணத்தில்  அனைவராலும்  விருப்பு  வெறுப்பின்றி  ஏற்கும்   தலைமையாக தொடர்வதற்கு   தொண்டர்களிடமும் தமிழக  மக்களிடமும்  பல்வேறு   முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறது

நமது தமிழக  அரசும்   அஇஅதிமுக  தலைமையும் இந்த சமயத்தில்  நமது    கழகத்தின்  அஇஅதிமுக  நச்சத்திர பேச்சாளரும்  திரைப்பட  நடிகருமான     மனோ பாலா அவர்கள் தமிழக  முதல்வர்  அண்ணன் ஓ. பன்னீர்செல்வம்  அவர்களையும்   இரண்டு  கோடி தொண்டர்களை அடங்கிய  அஇஅதிமுக  வின் பொது செயலளார்  சின்னமா அவர்களையும்   சினிமா  நடிகர்களின்  WhatsApp  குரூப்பில்   கேலி கிண்டல்  செய்து தவரான  வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்!

இது  ஒரு  தனி  மனித குற்றமல்ல ஒட்டு  மொத்த    சமுதாயத்திற்கும் எதிரான குற்றமாகும்! இதனை நான்  மிகவும்  வன்மையாக  கண்டிக்கிறேன்! மனோ பால மீது  நாளை காலை  சென்னை  போலிஸ் கமிஷனர்  அலுவலகத்தில் என் சார்பாக   புகார்   கொடுக்கப்படும் !

இதனை தொடர்ந்து அஇஅதிமுக  தலைமை  கழகத்திலும் போயஸ் கார்டனிலும் புகார்  மனு  கொடுக்கப்படும் !வீழ்ந்தாலும் எழுந்தாலும் அதிமுக -  மட்டுமே  !அம்மா  மீது  சத்தியம்         சினி சரவணன் .     அஇஅதிமுக          ஆலந்தூர்  தொகுதி  

இவ்வாற்உ தெரிவித்துள்ளார். இது குறித்து சினி சரவணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது. இயக்குனர் மனோபாலா கட்சியின் நட்சத்திர பேச்சாளர் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் நடிகர் ஆனந்தராஜ் போல் பேட்டி அளித்து கட்சியை விட்டு வெளியேறட்டும். 

ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டே இது போன்று அவரது குரூப்பில் பதிவு போடுவது கட்சி விரோத செயலாகும். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே இது பற்றி கட்சி தலைமையிடமும், போயஸ் கார்டனிலும் புகார் அளிக்க உள்ளேன்.

முதல்வர் பற்றி அவதூறாக பதிவு செய்துள்ளதால் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளிக்கிறேன். என்று தெரிவித்தார்.

அவர்தான் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தார் என்று எப்படி கூறுவீர்கள் என்று கேட்டதற்கு அவர் இருக்கும் குரூப்பில் நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கிறார்கள் அவருடைய போன் நெம்பர் எனக்கு நன்றாக தெரியும் அதிலிருந்துதான் அவர் பதிவு செய்துள்ளார் என்று நெம்பரையும் கூறினார்.

நான் சொல்வது தவறாக இருந்தால் அவர் என் மீது கமிஷனரிடம் புகார் அளிக்கட்டும் நான் சட்டப்படி அதை சந்திக்கறேன் என்று தெரிவித்தார். புகார் அளித்த அதிமுக பிரமுகர் சினி சரவணன் ஏற்கனவே மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் , அமைச்சர் சின்னய்யா மீது புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.