தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் கே.பாக்யராஜ் அதே சங்கத்தில் உறுப்பினராகத் துடிக்கும் அறிமுக இயக்குநர் ஒருவரை 6 மாதத்துக்கும் மேலாக அலையவிட்டுக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.

பிரபல எழுத்தாளரும், மோட்டிவேஷன் பேச்சாளருமான ஏ.எல்.சூர்யா, பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று தான் ’அனிதா பத்மா பிருந்தா’.திரைத்துறையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல நடிகை ஒருவரும், பிரபல இயக்குநர் ஒருவரும் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலில், தமிழ் சினிமாவில் பல இருட்டுப் பக்கங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளன.

இந்த நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த ஏ.எல்.சூர்யா, அதற்கான திரைக்கதையை முழுவதுமாக முடித்துவிட்ட நிலையில், எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையை பதிவு செய்வதற்காக, சங்கத்தில் உறுப்பினராக இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதன்படி சங்க ஊழியர்கள் கேட்ட அனைத்து விபரங்களையும் வழங்கியவர், சந்தா கட்டணமாக கேட்ட ரூ.7,000-க்கான டிடியையும் எடுத்துக் கொடுத்துவிட்டாராம். அனைத்தையும் பெற்றுக் கொண்டவர்கள் ஒரு மாதத்தில் அடையாள அட்டை வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், 6 மாதம் ஆகியும் இதுவரை அடையாள அட்டை கொடுக்கவில்லையாம்.பல முறை ஏ.எல்.சூர்யா, சங்க ஊழியர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு, இப்போ...அப்போ...என்று கூறியவர்கள், இறுதியாக “தலைவர் கையெழுத்து போட்டா தான் கொடுக்க முடியும், அவரு இன்னும் போடல” என்று கோபமாக சொன்னதோடு, ’உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க’ என்றும் சூர்யாவிடம் தெனாவட்டாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், ஒரு கையெழுத்து போடுவதற்காக தலைவர் பாக்யராஜ் 6 மாதங்களாக எதற்காக காலதாமதம் படுத்துகிறார், என்பது குறித்து எந்த காரணத்தையும் சொல்லாத ஊழியர்கள், எழுத்தாளர்களுக்கான சங்கம் என்பதை மறந்துவிட்டு ஒரு எழுத்தாளரை அவமதிக்கும் விதத்தில் பதில் அளித்த விதம் ஏ.எல்.சூர்யாவை கடுமையாக பாதித்திருக்கிறது.

கதை திருட்டு விவகாரங்களில் பஞ்சாயத்து என்றால் ஆர்வம் காட்டும் தலைவர் பாக்யராஜ், ஒரு எழுத்தாளரை மட்டும் இப்படி அலக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஏ.எல்.சூர்யா, தனக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எதிர்காலத்தில் இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அதற்காகவே இந்த தகவலை பத்திரிகைகளிடம் பகிர்ந்துக்கொண்டேன், என்றும் கூறுகிறார்.