இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து நடித்து வரும் பிரமாண்ட திரைப்படம் 'சர்கார்'.  

இந்நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 'சர்கார்' படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், கடந்த 21 ஆம் வெளியிட்டது. இந்த படத்தில் மிகவும் ஸ்டைலிஸ் லுக்கில் விஜய் இருப்பதால் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. 

எனினும் இந்த போஸ்டரில், சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. 

இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த போஸ்டர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான தமிழ்வேந்தன் என்பவர் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் மற்றும் 'சர்கார்' படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.