மலையாள கவர்ச்சி நடிகை ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடு முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையை எனக்குத் தருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்.
பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் தற்போது அரசியலில் இறங்கியுள்ளேன். நடிகை என்பதை தாண்டி தனி அடையாளமும் தனி அதிகாரமும் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும்கூட ஒரு பவர் வேண்டும். ஆனால், உறுதியாகச் சொல்கிறேன், என்னுடைய தேவைக்காக அரசியலுக்கு வரவில்லை. காங்கிரஸிலிருந்து சென்ற குஷ்புவின் இடத்தை நிரப்ப நான் வரவில்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். நான் காங்கிரஸில் சேர்ந்தது போல, இவர் இங்கிருந்து விலகிச் சென்றதற்கு ஏதாவது காரணம் இருக்கும்.
கட்சித் தலைமை அனுமதித்தால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணமும் தொடரும். இப்பவே என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள்.  நான் அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கிறேன். பல விஷயங்களை கற்கத் தொடங்கியிருக்கிறேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீர்கள்” என்று ஷகிலா தெரிவித்தார்.