’சாமி கும்பிடுறத மாத்துறது பகுத்தறிவு இல்லை. கும்புடுறேன் சாமி என்கிறதை  மாத்துறதுதான் பகுத்தறிவு....உன் பகுத்தறிவுல தீயை வைக்க’ என்று தொடங்கி ஆயிரக்கணக்கான கமெண்டுகள் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள ‘எல்.கே.ஜி’ இரண்டாவது வார விளம்பர புரமோஷனுக்கு எதிராகக் கிளம்பியுள்ளன.

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் இரு வாரங்களுக்கு முன் வெளியான ‘எல்.கே.ஜி’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் படத்துக்கான இரண்டாவது வார  புரமோஷன் வீடியோ ஒன்றை ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சாமி படங்களை அகற்றிவிட்டு பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களின் படங்களை கும்பிடுவது மட்டுமே பகுத்தறிவு என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்துக்கு பாலாஜி எதிர்பார்த்தது போலவே கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ...முட்டாள் தனமா உனக்கு அரசியல் தெரியலைன்னா மூடி கிட்டு இரு பாலாஜி Bro.,பகுத்தறிவு-க்கு அர்த்தம் தெரியாம அரைவேக்காடு தனமா ஒரு சீன் வச்சிட்டு அதை காமெடி-ன்னு சொல்லிட்டு இருக்காதீங்கய்யா 😂😂 இதை பெருமையா வெட்டி ஒட்டி ட்வீட் வேற 😂😂 யாருய்யா இந்த வசனம் வச்ச அரைவேக்காடு டைரக்டர்?

...அந்த பகுத்தறிவு பகலவன் ஆரம்பித்த தி.க வில் இருந்து பிரிந்து  உருவாகிய திமுக வில் இருந்து பிரிந்து உருவாகியது அதிமுக. அந்த அதிமுக எம் ஜி ஆரின் உதவியால்தான்  ஐசரி வேலன்  கல்லூரி ஆரம்பித்தார்... அவர்களின் மகன் ஐசரி கணேசன்  இந்த படத்தின் தயாரிப்பாளர். விதை நீங்க கிண்டல் பண்ணுனவர் போட்டது’ என்று மக்கள் கமெண்ட் போட்டுக்கொண்டிருக்க,  ’மூடர் கூடம்’ படத்தின் இயக்குநர் நவீன், “எல்.கே.ஜி வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ  @RJ_Balaji. ஆனால் வீட்டிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% பெரியாரின் ஆதரவாளர்கள் நாத்திகர்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.