தற்போதைய காமெடி நடிகர்களிலேயே செம்ம பிசியாக நடித்துவருபவர் நம்ம யோகிபாபு தான். சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். தற்போது சந்தானம் - யோகிபாபு காம்பினேஷனில் வெளியான "டகால்டி" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகிபாபுவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மணப்பெண்ணுடன் யோகிபாபு செல்ஃபி எடுத்துக்கொண்டதாகவும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது. இதனை மறுத்த யோகிபாபு, அந்த பெண் ஒரு துணை நடிகை என்றும், ஷூட்டிங்கின் போது செல்ஃபி எடுத்துக்கொண்டதாகவும் விளக்கம் அளித்தார். 

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதையும் மறுத்த யோகிபாபு தனக்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாகவும், திருமணம் பற்றி நானே அறிவிப்பேன் என்றும் டுவிட்டரில் பதிலளித்தார். 

ஆனால் நாம் கணித்தது போல இன்று காலை யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் ஆரணியில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண கோலத்தில் இருக்கும் யோகிபாபு - மஞ்சு பார்கவி புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.