வைகைப்புயல் வடிவேலுவுடன் பல காமெடிப்படங்களில் நடித்தவரும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகருமான ஜெயச்சந்திரன் தன்னுடைய வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வடிவேலுவுக்கு நெருக்கமான நடிகர் கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் ஜெயச்சந்திரனின் திடீர் மறைவு கோடம்பாக்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியின் இயக்கத்தில் சூர்யா,த்ரிஷா நடித்த ‘ஆறு’ படத்தில் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் ஜெயச்சந்திரன்.ஒரு காட்சியில் என்னய்யா கழுத்தெல்லாம் ரத்தம்’ என வடிவேலு கேட்க, `அட அசந்து தண்டவாளத்துல தூங்கிட்டேன் தம்பி, நாலஞ்சு ரயில் கழுத்துல ஏறிட்டுப் போயிடுச்சு. ஆள் தூங்குறதுகூட தெரியாம ரயிலை ஓட்டிட்டுப் போறானுக’ என்றபடி கடந்து செல்வார் ஜெயச்சந்திரன். இந்த நகைச்சுவையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

சில வருடங்களாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இவர் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இவர் 100 ற்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துள்ளார்.ஜெயச்சந்திரனின் மனைவி பெயர் லக்ஷ்மி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.சென்னை விஜயராகவபுரத்தில் உள்ள ஜெயச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று பிற்பகலில் வந்த ராதாரவி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.