Non-linear-ல் நான் சீனியர்னு முதல்வரே பாராட்டிட்டாரு! இனி பார்... ப்ளூ சட்டையை மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்
Iravin Nizhal : பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரையரங்கில் பார்த்து ரசித்து பாராட்டி உள்ளார்.
படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபன், ஒத்த செருப்பு படத்துக்கு பின்னர் மிகவும் ரிஸ்க் எடுத்து இயக்கிய படம் தான் இரவின் நிழல். இந்த படத்தை அவர் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். அதுமட்டுமின்றி Non-linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் எனக் குறிப்பிட்டு தான் இப்படத்தை விளம்பரப்படுத்தினார்.
பார்த்திபனுடன் பிரிகிடா, ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பார்த்திபனின் முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இப்படத்தை உலகின் முதல் Non-linear திரைப்படம் என பார்த்திபன் குறிப்பிடுவது பொய் என்றும், இதன்மூலம் அவர் ரசிகர்களை ஏமாற்றி இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.
இதையும் படியுங்கள்... ஆடியோ வெளியீட்டுடன் படப்பிடிப்பை முடிக்கும் விருமன்..எங்கு தெரியுமா?
இரவின் நிழல் படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் பார்த்திபன். அப்படத்தை பார்த்த முதல்வர், பார்த்திபன் பாணியிலேயே அவரை பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் “எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்.
ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பார்த்திபன் போட்ட டுவிட்டில், “Non-linear-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன” என பதிவிட்டு இறுதியில் இனி பார்… பார்க்க…. பாராட்டும் என எச்சரிக்கும் தொணியில் டுவிட் செய்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், அவர் ப்ளூ சட்டை மாறனை எச்சரிக்கும் விதமாகத் தான் இவ்வாறு பதிவிடுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட கடவுளே... ரூ.76,000 கொடுக்காததால் தளபதி விஜய் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!