நடிகர் விஷாலின் பரம எதிரியான ஐசரி கணேஷின் பட விழா ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். இதன் மூலம் தமிழக அரசு தமக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று நடிகர் விஷாலும் அவரது அணியினரும் குற்றம் சாட்டி வருவது நிரூபணமாகியுள்ளது.

நடிகராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த ஐசரி கணேஷ் தற்போது தனது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அதிக படத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். ’கோமாளி’,பப்பி’,’எல்.கே.ஜி’படங்களைத் தயாரித்து வெளியிட்ட அவர் கைவசம் மிர்ச்சி சிவா நடிப்பில் ஹோசிமின் இயக்கும் ’சுமோ’ கவுதம் மேனன் இயக்கும் ‘ஜோஸ்வா’ ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கும் நயன்தாரா நடிக்கவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் 2019 ம் ஆண்டு தனது தயாரிப்பில் வெளிவந்த மூன்று படங்களுக்கு விழா எடுத்து அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்த உள்ள ஐசரி கணேஷ், அவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளார். இவ்விழா வரும் ஞாயிறு 24ம் தேதியன்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை மிக மூர்க்கமாக எதிர்த்த ஐசரி கணேஷின் விழாவில் முதல்வர் கலந்துகொள்வதன் மூலம் இவ்வளவு காலமும் விஷாலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த அத்தனை நடவடிக்கைகளும் உள்நோக்கம் கொண்டவை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.