கமல் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளர் சிகே குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறினார். தனது விலகல் கடிதத்தையும் கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கமல் ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில், 40 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் மற்ற தொகுதி வேட்பாளர்கள் குறித்து செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடலூர் தொகுதி செ.கே. குமரவேலுக்கு வழங்கப்படும் என்ற நிலை இருந்தது.

ஆனால் என்ன காரணத்தினாலோ சி.கே.குமரவேல் திடீரென பதவி விலகல் கடிதத்தை கமலுக்கு அனுப்பியுள்ளார். கட்சியில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் வகையில், கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த கடலூர் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பாளர் சி கே குமரவேல் கட்சியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைக் கொடுத்திருப்பது மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

தனது விலகலுக்கு முழுக்காரணம் உட்கட்சி அரசியல்தான் என்றும் தனது மற்றும் தன் குடும்பத்தின் நேரத்தை இனியும் அரசியலுக்காக வீணடிக்கவிரும்பவில்லை’ என்றும் குமரவேல் தெரிவித்துள்ளார்.