காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அறவழிப் போராட்டம் நடைபெறும் என விஷால் அறிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பி வழங்கிய  உச்சநீதிமன்றம்,  6 வாரங்களுக்குள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காமல் கால அவகாசம் கேட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும்,  ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காகவும்  வரும் 8-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர்  சார்பில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கண்டன அறவழிப்  போராட்டம் நடத்தப்படும் என நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.