இடையில் சற்று அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி பிரச்சினை மீண்டும் மெல்ல தலையெடுக்கத் துவங்கியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டுடியோவில் ஒரு விளம்பர படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் பெப்சியில் உள்ள அவுட்டோர் யூனியனை சேர்ந்தவர்கள் கேமராவை வாடகை காரில் ஏற்றி விட்டனர். இதற்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் படப்பிடிப்பு தளவாடங்களை ஏற்றிச்செல்லும் பெட்போர்டு யூனியனை சேர்ந்த டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

படப்பிடிப்பு சாதனங்களை எங்கள் யூனியன் வாகனங்களில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது நடைமுறை. அதை மீறி வாடகை காரில் ஏற்றியது தவறு என்று கண்டித்தனர். அத்துடன் உடனே  தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு போன் செய்து, சென்னையில் நேற்று நடந்த சினிமா படப்பிடிப்புகளை புறக்கணிக்கச்சொல்லி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இதனால் படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றிச்செல்ல வாகனம் இல்லாமல் படக்குழுவினர் தவித்தனர். வேறு வழியில்லாமல் சென்னையில் நடந்த அனைத்து சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டனர். விஷால் நடித்த ‘அயோக்கியா’, லாரன்ஸ் நடிக்கும் ‘காஞ்சனா-3’, அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’, விமல் நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, விக்ரம் பிரபு,மகிமா நடிக்கும் ‘அசுரகுரு’ உள்பட 20 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நேற்று மட்டும் தயாரிப்பாளர்களுக்கு சுமார் ஒரு கோடி வரைக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்குமென்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி நிர்வாகிகள் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது.  இந்த மினி பிரச்சினையை சுருக்கமாக உடனே தீர்த்துவைக்கப் போகிறார்களா அல்லது வழக்கம் போல் வேலை நிறுத்தத்துக்கு வழி வைத்து தொழிலாளிகளை நோகடிக்கப்போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.