கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், அணைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் சினிமா பணிகளுக்கு அனுமதி கொடுக்க இயலாது என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 

கிட்ட தட்ட கடத்த நான்கு மாதங்களாக அணைத்து படங்களின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பலர் வேலை இன்றி, பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அடிமட்ட பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு... சமூக இடைவெளி பின்பற்றி செய்யக்கூடிய, எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கியதோடு, சின்னத்திரை படப்பிடிப்புகள் 60 பேருடன் மட்டுமே நடக்க வேண்டும் என, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

மேலும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கும் தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்கில் வெளியாக வேண்டிய ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின், பெண்குயின், போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் சில படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று, கோவில்பட்டியில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு  ’தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர படாத காரணத்தாலும், மக்களை காக்க துரித முயற்சிகள் எடுத்து வரும் அரசு, தற்போதைக்கு திரைப்பட ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி அளிக்காது. என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் அடுத்த மாதமாவது படப்பிடிப்பு பணிகள் துவங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.