விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதி, சாலிகிராமம், திருவேங்கட சுவாமி தெருவைச் சேர்ந்தவர் 35 வயதாகும் வினிகிளாட்சன். இவர் சினிமா துறையில் துணை இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது விளம்பரப் படங்களையும் எடுத்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம், தன்னுடைய மனைவி அனிவிமலா மற்றும் நிரலயாவுடன் சாப்பிட்டுவிட்டு, தனி அறையில் தூங்க சென்றார்.

காலை எழுந்தவுடன் வினிகிளாட்சன்  மனைவி அனிவிமலா ,தனி அறையில் படுத்து தூங்கிய கணவரை, தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காதததாலும், அவருடைய உடல் அசைவற்று இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சில் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு வினிகிளாட்சன், உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  சாவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரடைப்பில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.