’என்னையெல்லாம் இனி மெகா ஸ்டார் என்று அழைக்காதீர்கள். இந்திய சினிமாவின் என்றென்றைக்குமான ஒரே மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மட்டுமே. அவருக்குப் பக்கத்தில் ஒருவரும் நெருங்க முடியாது’என்று அவரை வானளாவப் புகழ்ந்திருக்கிறார் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் நயன்தாரா, தமன்னா, ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். ரூ 400கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் நரசிம்ம ரெட்டியின் ஆசான் வேடத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிரஞ்சீவி, ’அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி.  இந்தியாவுக்கு ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் சுரேந்தர்  விரும்பினார். 

அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை  பர்சனலாக அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது" என்று குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபர் 2ந்தேதி அன்று, இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.