இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது திரைத்துறை தான். கோடிகளில் புரளும் நடிகர், நடிகைகள் ஷூட்டிங் இல்லாவிட்டால் அதை ஓய்வு நேரமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஷூட்டிங்கை மட்டுமே நம்பி பிழைக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். 

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வேலை உணவுக்கு கூட கஷ்டப்படுவதால் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்தார். ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நிதி அளித்தும் மொத்த தொகை ஒரு கோடியைக் கூட தாண்டவில்லை. 

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு என்று டோலிவுட்டில் தனியாக ஒரு சங்கம் உள்ளது.  அங்கு கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கினார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி. கொரோனாவால் வேலை இழந்து வாடும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நிதி வசூலிக்க தொடங்கினார். 


உடனடியாக தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதியை வாரி வழங்கினார். சிரஞ்சீவி முன்னெடுத்த இந்த நல்ல காரியத்தால் அங்கு சில நாட்களிலேயே ரூ.6.2 கோடி வரை நிதி திரட்டியுள்ளார். இன்னும் பலரும் நிதி கொடுத்து வருகின்றனர். ஆனால் கோலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஒரு ரூபாய் கூட கொடுத்து உதவவில்லை என்பதே நிதர்சனம்.