பொள்ளாச்சி விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பொங்கினாலும் பொங்கினார் அதைக் கண்டு அவருக்கு தனது ட்விட்டர் பதிவுகள் வழியாக பொங்கலோ பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச் சாட்டுகள் கூறி வந்த பாடகி சின்மயி.

நேற்று இரவு பிரசாத் லேப்பில் நடந்த ‘நெடுநல்வாடை’ பட சக்சஸ் மீட் விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து படக்குழுவினரைப் பாராட்டியதோடு நில்லாமல் நாட்டு நடப்பையும் கொஞ்சம் தொட்டுச் செல்வோமே என்ற எண்ணத்தில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் குறித்தும் கொஞ்சம் குசலம் விசாரித்தார்.

தனது பேச்சில்,’’இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அறத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது’ என்றார்.

வைரமுத்துவின் அந்தப் பேச்சை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ’பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு கொதிக்குது’சின்மயி, ‘சாத்தான் வேதம் ஓதுவதைப் பாருங்கள். இவர் எனக்குக் கொடுத்த பாலியல் தொல்லைகளிலிருந்து காப்பாற்றிய அதே மீடியா கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்றுவரை அவரை புத்தனாகவே சித்தரிக்க முயல்கிறது. விட்டால் அவரைக் குழந்தைகள், பெண்கள் முன்னேற்றத்துறைக்கு மந்திரியாக்கிவிட்டுத்தான் வேறு வேலையே பார்ப்பார்கள் போல’ என்று தொடங்கிப் பத்து நிமிடங்களுக்கு ஒரு பதிவாய்ப் பொங்கித் தீர்த்துகொண்டிருக்கிறார்.

இன்றைய மதியம் 3 மணி நிலவரப் படி, தனது ட்விட்டர் பதிவுகளில் சின்மயி இன்னும் அவரை பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதிகள் பட்டியலில் மட்டும்தான் சேர்க்கவில்லை.