’பத்திரிகையாளர் சந்திப்புகளில் என்னைத்தொடர்ந்து அவமானப்படுத்துவருகிறார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்கவேண்டிய அவர்களுக்கு பதில் சொல்லியே நான் நொந்துபோய் உள்ளேன்’ என்று கொதித்துக் கொந்தளித்து விரக்தியின் விளிம்புக்கே சென்றிருக்கிறார் பாடகி சின்மயி.

சர்ச்சையின் நாயகி சின்மயி வைரமுத்து மீது புகார் கொடுத்த நாளிலிருந்தே வலதளங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். லேட்டஸ்டாக அவர் பி.ஜே.பி. மகளிரணியினருடன் இரு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை சிலர் வெளியிட்டு அவரது பி.பியை எகிறவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கதறல் தொனியில் பதிலளித்துவரும் சினமயி,...

''அந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மகளிர் தின நாளில் எடுக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசச் சென்றிருந்தேன். நானேதான் அந்தப் படங்களை ட்வீட் செய்திருந்தேன். ஊடக நண்பர்களே! இதை மீடியா க்ரூப்களில் ஷேர் செய்கிறீர்களே பொதுப் புத்தி இருக்கிறதா? இவற்றையெல்லாம் மேற்கொள்ள யார் உங்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள்?

இந்தப் படத்தைப் பகிரும் அனைவரையுமே கேட்கிறேன். உங்களுக்கு மூளை இருக்கிறதா? இல்லை ஞாபக மறதி ஏற்பட்டிருக்கிறதா? ஆதார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நான் அதைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அரசியல், ஆன்மிகம் எனப் பலதுறை ஆண்கள் மீது புகார்கள் உள்ளன. ஆனால், பெண்கள் மீதே குறை கூறி சதி சாயம் பூசி தப்பு செய்தவர்களைக் காப்பாற்ற எத்தனை கூட்டுக் களவாணித் தனங்கள்?

நான் எனது கதையைச் சொல்லி என் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளேன். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புகளில் என்னைப் பலரும் கடிந்துகொண்டு அவமானப்படுத்தினார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்க வேண்டிய சதிகாரர்களின் மனங்களில் உதித்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்லும் கட்டாயத்துக்கு உள்ளானேன்'' என்கிறார்.

 

மீடியா மக்களே சின்மயிக்கு தீபாவளியை முன்னிட்டாவது ரெண்டே ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் விடக்கூடாதா?