சமீபகாலமாக பிரபலங்களின் மலரும் நினைவுகள் சங்கமிக்கும் இடமாக ட்விட்டர் தளம் மாறிக்கொண்டுவரும் நிலையில் சேரனின் ‘பொற்காலம் 22 ஆண்டுகள்’என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. அது தொடர்பான பதிவுகளுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக பதில் அளித்து வரும் இயக்குநர் அப்படம் ரிலீஸான சமயத்தில் ரஜினி தன்னை அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்த நிகழ்வையும் பதிவிட்டுள்ளார்.

‘97ம் ஆண்டு ‘பாரதி கண்ணம்மா’வை அடுத்து சேரன் இயக்கிய படம் ‘பொற்காலம்’. இப்படம் சூப்பர் ஹிட்டாக ஓடி சேரனை தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குநராக்கியது. அப்படம் ரிலீஸாகி இன்றோடு 22 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் சேரனின் ட்விட்டர் பக்கத்தில் பலரும் பொற்காலம் படம் தொடர்பாம தங்கள் நினைவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அப்பதிவுகளுக்கு நன்றி தெரிவித்த சேரன்,...1997... அக்டோபர் மாதம் 30ம் தேதி வெளியானது..
இன்றும் அந்த படம் பற்றிய நினைவுகள்..இன்னும் என்னுள் வாழும் மாணிக்கம், மரகதம், பஞ்சவர்ணம், ராசுவேளார்....
ஒளிபதிவாளர் ப்ரியன் அவர்களும் முரளி சார் மணிவண்ணன் சார் மூவருமே இப்போது இல்லை.. அவர்களின் உழைப்பும் கதாபாத்திரங்களும் வாழ்கிறது..
கலைக்கு மட்டுமே காலம் கடந்து வாழும் சக்தி இருக்கிறது...முதன்முதலாக குயவர்களுக்கான கலையான மண்பாண்டம் செய்யும் தொழிலை திரைக்கு அறிமுகம் ஆக்கிய படம். தொடர்ந்து 40 நாட்கள் அடைமழையிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி 100 நாட்களை கடந்த படம்..
நல்ல படைப்பு என இதுவரை கொண்டாடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி...என்று பதிவிட்டிருந்தார்.

அப்பட ரிலீஸின்போது ரஜினி தனக்கு அழைப்பு விடுத்ததையும் நினைவுகூர்ந்த அவர்,...மறக்கமுடியாத நிகழ்வு.. 
சூப்பர்ஸ்டார் அவர்கள் என்னை அவரது அருணாச்சலம் படவிழாவில் அழைத்து தங்கசங்கிலி பரிசாக அளித்தார்.. அன்றிலிருந்து இன்றுவரை என்மேல் பாசம்காட்டும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்...என்றும் பதிவிட்டிருக்கிறார்.