தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் மிகவும் நொடித்துப்போன நிலைக்கும்போது மொய் விருந்து என்று ஒன்று வைத்து தனது வாழ்வாதாரத்தை சரிக்கட்டிக்கொள்ள முயல்வார்கள். அதே வழியில் வலைதளங்கள் வழியாக மொய் விருந்து ஒன்றுக்கு வலை விரித்திருக்கிறார் பிரபல இயக்குநர் சேரன்.

தனது ‘திருமணம்’ சில திருத்தங்களுடன் படத்தின் தோல்வியை சுலபமாக ஏற்றுக்கொள்ளாத சேரன் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. அப்படி ரிலீஸான தியேட்டர்களும் தரமாக இல்லை. படம் வெளியான தியேட்டர்களிலிருந்த பாப்கார்ன் நமத்துப்போயிருந்தது என்று என்னென்னவோ காரணங்கள் சொல்லிப் புலம்பி வந்தார். அந்த வரிசையில் தற்போது படம் ஓடாததற்கு கட்டக் கடைசியாக அவர் கண்டுபிடித்திருக்கும் காரணம் படத்தைப் பலரும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற திருட்டு இணையதளங்களில் பார்த்திருக்கிறார்கள் என்பது.

அப்படிப் பார்த்தவர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் விதமாக தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் உருக்கமான ஒரு பதிவிட்ட சேரன்,...நண்பர்களே. குற்ற உணர்விலிருந்து விடுபட ஒருவாய்ப்பு.
’திருமணம்’ படம் தியேட்டர்ல பாக்க முடியல... அதுனால பைரசில பாத்தேன்னு சொல்றவங்க 
அதற்கான தொகையை இந்த அக்கவுண்ட்க்கு அனுப்பவும்...என்று ஒரு வங்கிக் கணக்கை அனுப்பியிருக்கிறார்.

சேரனின் அந்தப் பதிவுக்கு பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே கமெண்டுகளில் வந்துகொண்டிருக்கின்றன...மட்டமான ஒரு படத்த எடுத்ததுக்கு நீங்க தான் பார்த்த எங்களுக்கு பணத்த திருப்பி தரனும். தேசிய விருது வாங்கிய நீங்க இப்படி பொதுவெளி பணம் வேண்டி கெஞ்சுறது அசிங்கமா இருக்கு சார்....அப்போ தியேட்டரில் படம் பார்த்து  மன உளைச்சலுக்கு ஆளானவங்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பீங்களா? என்கிற ரீதியிலேயே பெரும்பாலான கருத்துகள் இருக்கின்றன.