நயன்தாராவுடன் சென்னை மேயர் பிரியா..! இணையத்தை கலக்கும் ‘திடீர் கூட்டணி’..!
சென்னையின் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மேயர் என்ற பெருமையுடன் சமீபத்தில் பதவியேற்ற மேயர் பிரியாவுடன், நடிகை நயன்தாரா நட்பாக இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழகத்தின் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயராக பதவியேற்றுள்ளவர் பிரியா . என்ன சம்பந்தமே இல்லாமல் சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம். நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும், சென்னை மேயர் பிரியாவும் சந்தித்துள்ளார்கள். அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி பெண் ஒருவர் மேயராக பதவியேற்றது சென்னை மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரியா... தற்போது தான் பதவியேற்றுள்ளேன் விரைவில் எனது பணியை நீங்களே பார்ப்பீர்கள் என கூறி அசத்தியிருந்தார். நடிகை நயன்தாராவோ தனது காதலர் விக்னேஷ் சிவனோடு இணைந்து பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். கடந்த வாரம் தனது புது காரோடு கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்த நிலையில் தான் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
அதே சமயத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது நயன்தாரா, சென்னை மேயர் பிரியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பதிலுக்கு பிரியாவும் நன்றி தெரிவித்துகொண்டார். இதனையடுத்து இருவரும் உடல் நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் நயன்தாரா மற்றும் சென்னை மேயரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.